10 மாவட்டங்களில் ஏஜென்டுகள் மூலம் நிதி நிறுவன அதிபர் ரூ.200 கோடி மோசடி: போலீஸ் விசாரணையில் தகவல்

சேலம்: சேலம், வேலூர் உள்பட 10 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோரிடம் முதலீடு பெற்று, சேலம் நிதி நிறுவன அதிபர் ரூ.200 கோடி மோசடி செய்திருப்பது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் தாதகாப்பட்டி குமரன்நகர் 3வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (51). இவர், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே ‘‘ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்’’ என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறி சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏஜென்டுகள் மூலம் முதலீடு பெறப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் பணம் வசூலித்த நிலையில், சொன்னபடி பணத்தை கொடுக்காமல் பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது நிறுவன பங்குதாரர்களான மகன் வினோத்குமார், ஓமலூரை சேர்ந்த சுப்பிரமணியன் (49) ஆகியோர் ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக சேலம் அலுவலகத்திற்கு வந்து வேலூரைச் சேர்ந்த பொதுமக்கள் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், முதலீடு செய்த நபரை தாக்கிய வழக்கில் நிதிநிறுவன அதிபர் பாலசுப்பிரமணியம், சுப்பிரமணியன் ஆகியோரை அழகாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திருச்சியை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஜெயராஜ் என்பவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னிடம் ரூ.2 லட்சம் முதலீடு பெற்று மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, நிதி நிறுவன அதிபர் பாலசுப்பிரமணியம், அவரது மகன் வினோத்குமார் மீது கூட்டு சதி, மோசடி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.  நிதிநிறுவன அதிபர் பாலசுப்பிரமணியம் மீது சேலத்தை சேர்ந்த 232 பேர் புகார் கொடுத்தனர். மேலும், பாலசுப்பிரமணியம், அவரது மகன் வினோத்குமார் ஆகியோர் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கிளைகளை அமைத்து கோடிக்கணக்கில் நிதி முதலீடு பெற்று மோசடி செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 3,500 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1000 பேரும், திருச்சியில் 1000 பேரும், நாமக்கல், கரூர், சிவகங்கை மாவட்டங்களில் 4,000 பேரும் என சுமார் 10 ஆயிரம் பேர் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக ரூ.200 கோடி அளவிற்குமோசடி செய்துள்ளனர். பினாமி பெயரில் வாங்கி  சொத்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Related Stories: