தூத்துக்குடியில் அடுத்தடுத்து பயங்கரம்; வாலிபர் உள்பட 2 பேர் அடித்து கொலை: இருவர் கைது; ஒருவருக்கு வலை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு 4வது ரயில்வே கேட் பகுதி அருகே பாழடைந்த வீட்டு மாடியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அங்கு ஒருவர் இறந்து கிடப்பதாகவும், எஸ்.பி. அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரூரல் ஏஎஸ்பி சந்தீஷ், சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ், எஸ்ஐக்கள் ஹென்சன் பவுல்ராஜ், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வாலிபர் ஒருவர் கல்லால் தலை சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனிப்படையினரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த ஆத்திமுத்து என்பவரது மகன் கார்த்திக் (25) என்பதும், இவர் மீது 2017ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட், வடபாகம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கார்த்திக்கை கொலை செய்தது, தூத்துக்குடி, அழகேசபுரத்தைச் சேர்ந்த கந்தையா மகன் ராம்தேவ் (21), அண்ணாநகர் 4வது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராம்தேவ், 17 வயது சிறுவன், கார்த்திக் ஆகிய 3 பேரும் 4ம் ரயில்வே கேட் பாரில் மது அருந்தும் போது நெருங்கிய நண்பர்களாகினர். அதன் பின்னர் எப்போது மது அருந்தினாலும் ஒன்றாகவே மது அருந்துவது வழக்கம். பின்னர் மதுவை வாங்கிக் கொண்டு 4ம் கேட் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் மாடிக்கு செல்லத் தொடங்கினர். அவ்வாறு கடந்த 22ம்தேதி அந்த வீட்டில் 3 பேரும் மது அருந்திய போது, ராம்தேவின் குடும்பத்தைப் பற்றி கார்த்திக் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்களுக்கிடையே தகராறு முற்றவே, ராம்தேவும், 17 வயது சிறுவனும் சேர்ந்து கார்த்திக்கை கல்லால் முகத்திலும், தலையிலும் அடித்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த தனிப்படயைினர், அவர்களை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர்.

மற்றொரு கொலை: தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள இங்கிலீஷ் சர்ச் அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று பட்டப்பகலில் கல்லால் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், எஸ்ஐ முருகப்பெருமாள் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட முதியவர், ரயில் நிலையம், கடற்கரை ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக தர்மம் எடுத்து அங்கேயே சாப்பிட்டு, தூங்கி வந்தது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் நடுத்தர வயது நபர் ஒருவர், இரவில் கல்லைத் தூக்கி வந்து முதியவர் மீது போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கொலையாளியை மத்திய பாகம் போலீசார் தேடி வருகின்றனர்.

பலாத்கார வழக்கில் கைதானவரின் தம்பி: கடந்த வாரம் தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடுத்தர வயது பெண் ஒருவர் கத்தி முனையில் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த வழக்கில் கைதான 2 பேரில் கோகுல்நாத் என்பவரும் ஒருவர். அந்த கோகுல்நாத்தின் அண்ணன் ராம்தேவ், கார்த்திக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: