காரியாபட்டியில் அரசு பெண்கள் பள்ளி முன்பு ஆக்கிரமிப்பு-சாலையோர கடைகளால் இடையூறு

காரியாபட்டி : காரியாபட்டியில் அரசுப் பெண்கள் பள்ளிக்கு முன் சாலையோர கடை வைத்து ஆக்கிரமித்துள்ளதால், ஆசிரியர்கள், மாணவிகளின் போக்குவரத்துக்கு சிரமப்படுகின்றனர். இதை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.காரியாபட்டி தாலுகாவில் சுமார் 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவிகள், காரியாபட்டியில் மதுரை-அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். 10, 11, 12ம் வகுப்புகளில் மட்டும் சுமார் 800 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியின் முன்பு சாலையோர வியாபாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். வியாபாரிகள் காலை நேரத்தில் வாகனங்களிலிருந்து காய்கறிகளை இறக்கி வைக்க பள்ளியை மறித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், காலையில் பள்ளிக்கு வரும் மாணவிகள்,ஆசிரியைகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் தினந்தோறும் பள்ளியின் முன்பு உள்ள வேன் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பேக்கரி கடைப் பகுதிகளில் நிற்கும் இளைஞர்களும், மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் இடையூறு செய்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, பள்ளி மாணவிகளும், ஆசிரியைகளும் சிரமம் இல்லாமல் பள்ளிக்கு வருவதற்கு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை சீரமைத்து பள்ளி மாணவிகளின் சைக்கிள்களை பாதுகாப்புடன் நிறுத்த ஸ்டாண்ட் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: