வரதட்சணை கொடுமை வழக்கில் தலைமறைவு குற்றவாளி 15 ஆண்டுக்கு பிறகு கைது: நைஜீரியாவிலிருந்து வந்தபோது சிக்கினார்

சென்னை: கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து,  கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு  வந்தது. அதில் நைஜீரியாவிலிருந்து வந்த பயணியின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், அவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் (46) என்பதும்,  வரதட்சணை கொடுமை வழக்கில், 15  ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதையடுத்து  குடியுரிமை அதிகாரிகள், ராமலிங்கத்தை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து  வைத்தனர். விசாரணையில், ராமலிங்கம் மீது 2007ம் ஆண்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதும், ராமலிங்கத்தை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக மகளிர் போலீசார் தேடியபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பியதும் தெரிந்தது.

இதனால், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராமலிங்கத்தை 2007ம் ஆண்டில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் லுக்அவுட் நோட்டீஸ் போட்டு வைத்திருந்தார். ஆனாலும், 15 ஆண்டுகள் தொடர்ந்து ராமலிங்கம் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், ராமலிங்கம், நைஜீரியாவில் இருந்து கத்தார் நாடு வழியாக சென்னைக்கு வந்தபோது, அதிகாரிகளிடம் பிடிபட்டது தெரிந்தது. இதையடுத்து, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர். கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார்,  சென்னை வந்து ராமலிங்கத்தை கைது செய்து அழைத்து செல்கின்றனர்.

Related Stories: