புதிய சரக்கு போக்குவரத்து கொள்கை செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.76 ஆயிரம் கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பல சுற்று ஆலோசனைகள் நடத்தப்பட்டு, சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளை அறிந்து கொள்ளும் வகையில் இந்த புதிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வரும்போது, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கும்.

இதேபோல், செமி கண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்காக ரூ.76 ஆயிரம் கோடி ஊக்குவிப்பு திட்டத்துக்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான திட்டத்தின் கீழ், அனைத்து தொழில்நுட்ப முனையங்களுக்கும், திட்ட செலவில் சமவீத அளவில் 50 சதவீத நிதியுதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தினால், உற்பத்தி, முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அரசு கருதுகிறது. சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘‘செமிகண்டக்டர் துறை ஊக்குவிப்பால், ரூ. 94 ஆயிரம் கோடிக்கு நேரடி முதலீடு கிடைக்கும்.  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும்,’’ என்றார்.

Related Stories: