எஸ்பி தலைமையில் வாகன சோதனை விதிமீறிய 70 வாகனங்கள் அதிரடி பறிமுதல்-பைக் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் எஸ்பி தலைமையில் நேற்று நடந்த திடீர் வாகன சோதனையில், ஆவணங்கள் இல்லாத 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவர்கள் ஓட்டிய 45 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.திருவண்ணாமலையில் நேற்று மாலை எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் டிஎஸ்பி குணசேகரன் உள்ளிட்டோர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பஸ் நிலையம், ரவுண்டானா சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, மாட வீதி, கிரிவலப்பாதை என ஒரே நேரத்தில் இந்த சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களும் இந்த சோதனையில் சிக்கினர்.அதேபோல், மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். மாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு வரை இந்த அதிரடி சோதனை நீடித்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அதிரடி சோதனைகள் குறித்து, எஸ்பி கார்த்திகேயன் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில், வாகன விபத்துக்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் கடந்த 3 மாதமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, வீதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க திடீர் வாகன சோதனைகள் நடத்தப்படுகிறது. அதன்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனங்களை ஒட்டியது கண்டறியப்பட்டு, 45 பைக்குகளை பறிமுதல் செய்திருக்கிறோம். இது தொடர்பாக, வாகனத்தின் உரிமையாளர் மற்றும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பைக்கில் 3 பேர் பயணம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வாகனத்தில் பதிவு எண் இல்லாதது போன்ற குற்றங்களுக்கான 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலை நகரில் மட்டும் இன்று(நேற்று) ஒரே நாளில் உரிய ஆவணம் இல்லாத 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்.

வாகன திருட்டில் ஈடுபட்டதாக 2 பேர் போளூரில் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும், கள்ளச்சாராய ரெய்டில் இன்று(நேற்று) ஒரே நாளில் 1500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழித்திருக்கிறோம். கள்ளச்சாராயம், பான்பராக், குட்கா, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மட்டுமின்றி, அதற்கு பின்னணியில் உள்ளவர்களையும் தீவிரமாக தேடி வருகிறோம். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: