72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்; லட்சக்கணக்கான தாய்மார்கள் ஆசி: பிரதமர் மோடி உருக்கம்

புதுடெல்லி: தனது பிறந்தநாளில் லட்சக்கணக்கான தாய்மார்கள் ஆசி வழங்கி இருப்பதாக, பிரதமர் மோடி உருக்கத்துடன் கூறியுள்ளார். பிரதமர் மோடி நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். 2014ம் ஆண்டு பிரதமரான பிறகு ஒவ்வொரு ஆண்டும் மக்களோடு தனது பிறந்தநாளை கொண்டாடுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இந்தாண்டு மத்தியப் பிரதேச மாநிலம் சென்ற அவர், நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகளை விடுவித்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார். ஐடிஐ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநாடு மற்றும் தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கை அறிமுக விழா என 4 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

முன்னதாக பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரசின் ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பாஜ சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் சேவை தினமாக கொண்டாடப்பட்டது. மபி மாநிலம், சியோபூரில் மகளிர் சுயஉதவிக்குழு  மாநாட்டில் பேசிய மோடி, ‘‘வழக்கமாக எனது பிறந்தநாளில் எனது தாயை சந்தித்து ஆசி பெறுவேன். ஆனால், இன்று லட்சக்கணக்கான தாய்மார்கள் எனக்கு ஆசி தந்துள்ளார். தாய்மார்களும், சகோதரிகளும் தான் எனது வலிமையும், உத்வேகமமும் ஆவர்’’ என்றார்.

Related Stories: