இஸ்லாமியர்களும் வழிபாடு நடத்தும்; மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான நயினார்கோயில்; புனரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு: அரசுக்கு நன்றி தெரிவித்த பக்தர்கள்

சாயல்குடி: இந்து கோயிலில் இஸ்லாமியர்கள் வழிபடுவதால் பல நூற்றாண்டு காலமாக மதநல்லிணகத்திற்கு எடுத்துக்காட்டாக, ராகு ஸ்தலமான நயினார்கோயில் சவுந்தர்ய நாயகி அம்மாள் உடனுரை நாகநாதர் கோயில் விளங்குகிறது.

பழமை மாறாமல் புதுப்பிக்க அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புராணங்கள், இதிகாசங்களுடன் பல வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமாக திகழக்கூடியது ராமநாதபுரம் மாவட்டம். இங்கு திருமருதூர் என்ற கிராமம் இருந்துள்ளது. உகாய் எனப்படும் வில்வ மரம், மருது மரம் நிறைந்த இந்த வனப்பகுதியில் வேடன் ஒருவன் இருந்துள்ளான். வேடனின் பக்தியால் சிவப்பெருமானார் சிவலிங்கமாக உருவமாக மாறியதாக வரலாறு உண்டு. வேடன் குடும்பத்தினர் உள்ளிட்ட அக்கிராம மக்கள் வணங்கி வந்த அந்த லிங்கம் நாளடைவில் வழிபாடு இடமாக மாறிவிடுகிறது.

இந்த காலக்கட்டத்தில் வாசுகி என்ற நாகப்பாம்பு ஒன்று தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளது. அந்த பாம்பு இங்குள்ள குளத்தில் உடலை நனைத்துவிட்டு, வேடன் வழிபட்ட லிங்கத்தை வழிபட்டதாகவும், அதன்பிறகு வயிற்று வலி பறந்து, அந்த பாம்பு சாப விமோசனமடைந்து சிவலிங்கத்திற்கு பாதுகாப்பு அரணாக அமர்ந்ததால் நாகலிங்கமாக மாறியதாக கூறப்படுகிறது.

நாளடைவில் புற்றடியாக மாறிய இங்கு அமைக்கப்பட்டுள்ள புற்றடி நாகலிங்கத்தை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். வாசுகி பாம்பு புனித நீராடிய அந்த தீர்த்தக்குளமானது வாசுகி தீர்த்த தெப்பக்குளமாக இன்று உள்ளது. பல நூற்றாண்டுகளை கடந்து விட்டதால் சேதமடைந்து வருகிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்தில் முல்லா என்ற இஸ்லாமியர் வசித்து வந்துள்ளார். அவரது மகள் வாய்பேச முடியாதவராக இருந்துள்ளார். இதனால் வேதனையில் இருந்த அவரை திருமருதூர் கிராமம் சென்று நாகலிங்கத்தை வழிபாடு செய்ய கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து அந்த சிறுமியை அழைத்துகொண்டு, வாசுகி தீர்த்தத்தில் நீராடி விட்டு, நாகலிங்கம் முன்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி நைனா(அப்பா) என்று உரக்க கத்தியுள்ளார். அதன்பிறகு சிறுமிக்கு பேச்சாற்றல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அன்று முதல் திருமருதூர் கிராமம் நயினார்கோயில் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நயினார்கோயில் என பெயர் காரணம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்த வாய் பேசமுடியாத இஸ்லாமிய சிறுமியை பேசவைத்த ஸ்தலம் என்பதால், இன்று வரை ஏதாவது வேண்டுதலுடன் வரும் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து, நேர்த்திக்கடனும் செலுத்தி விட்டு செல்கின்றனர். அவர்கள் வழிபாடு செய்ய கோயிலுக்குள் தனி இடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கோயில் பல நூற்றாண்டு காலமாக மதநல்லிணகத்தை போற்றக்கூடிய நினைவு சின்னமாகவும் இருந்து வருகிறது.

சர்பதோஷம் எனப்படும் பாம்பு சம்மந்தமாக தோஷங்கள், ராகு தோஷங்கள், உடம்பில் ஏதாவது ஊனம், தீராத நோய்கள், மரு உள்ளிட்ட தோல் நோய்கள், திருமணம் தடை, குழந்தையின்மை, தேள்,பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைக்களுக்கு தீர்வு கிடைப்பதாக நம்பப்படுவதால் ராகு ஸ்தலமாக விளங்குகிறது.

இதனால் இங்குள்ள புற்றடியில் கோழிமுட்டை, பால் படைத்து வழிபாடு செய்தும் பாம்பு, தேள்,மனித உருவங்கள், உடல் பாகங்கள் உள்ளிட்ட உருவங்களை வாங்கி வந்து பிரார்த்தனை செய்து உண்டியலில் போட்டும், நுழைவு பகுதி கொடி மரம் முன்பு அமைந்துள்ள நாகர் சிலைக்கு மல்லிகை பூ, மிளகு கலந்த கல் உப்பை கொட்டியும் பொதுமக்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும் கோயிலை சுற்றுவட்டார கிராமத்தினர் விளைவித்த நெல்,மிளகாய்,பருத்தி உள்ளிட்ட தானியங்கள், காய்கறி, பழங்கள், புளி உள்ளிட்ட அனைத்து சமையல் பொருட்களையும் நேர்த்திக் கடனாக செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறாக நேர்த்திக்கடனாக செய்தால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்து புதுப்பிக்கவும், தெப்பக்குளம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் கிராமமக்கள் மட்டுமின்றி பக்தர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் கூறும்போது. ‘‘இக்கோயில் பாறைகளை கொண்டு கலைநயத்துடன் கூடிய சிற்பங்கள், நூண்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை போன்று வாசுகி தீர்த்த தெப்பக் குளமும் பாறைகளால் ஆன படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளை கடந்து விட்டதால் பழமை மாறாமல் சீரமைத்து, புனரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ரூ..2கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயில் புனரமைப்பு மற்றும் தெப்பக்குளம் சீரமைப்பு, முடிகாணிக்கை மண்டபம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், ஓய்வறை, குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட கூடுதலான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது என்றார்.

Related Stories: