பாணாவரம் அருகே பட்டப்பகலில் துணிகரம் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பைக் திருடிய 3 பேருக்கு தர்ம அடி-சினிமா பாணியில் விரட்டி பிடித்த பொதுமக்கள்

பாணாவரம் : ராணிப்பேட்டை மாவட்டம்,  பனப்பாக்கம் அடுத்த பெரும்புலிபாக்கத்தில், ராஜ்குமார்(22) என்பவர் நேற்று  ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பைக்கை திருடி மின்னல் வேகத்தில் பறந்தனர். இதை பைக்கின் உரிமையாளர் ஜிபிஎஸ் கருவி மூலம் அறிந்து, பைக் செல்லும் பாதையில் உள்ள உறவினர்களுக்கு தொடர் தகவல் தெரிவித்துள்ளார்.

 அதன்படி, உஷாரான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பைக்கை பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். இதனால் உஷாரான பைக் திருடர்கள் உளியநல்லூர் பகுதியில் திருடி வந்த பைக்கை போட்டுவிட்டு, அவர்கள் வைத்திருந்த ஒரு பைக் மூலம் தப்பினர். இதுகுறித்த தகவல் சுற்றுப்புற கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு பரவியது.

உஷாரான சுற்றுப்புற கிராம மக்களும் சேர்ந்து சினிமா பாணியில் அவர்களை விரட்டிச் சென்றபோது,  கர்ணாவூர்- வேடந்தாங்கல் சாலையில் பைக்கை போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 3 வாலிபர்களை பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் 3 பேரையும் ஒப்படைத்தனர்.

பைக் திருடர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சரவணன் (28), பாணாவரம் பழைய பாளையம் ரோட்டை சேர்ந்த, சகோதரர்கள் ராஜேஷ் (26), அஜித் (24) என தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த 3 பேரும், வாலாஜா அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பைக் திருடர்களை சினிமா பாணியில் பொதுமக்கள் விரட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: