குன்னூரில் ஆற்றில் கொட்டப்படும் கட்டிட கழிவு வெள்ளநீர் குடியிருப்புகளை சூழும் அபாயம்

குன்னூர் : குன்னூரில் ஆற்றில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் மழை நாட்களில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகும் அபாயம் உருவாகியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரியுள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும். இந்த காலத்தில் குறிப்பாக, நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்யும்.

கன மழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆறுகள் மற்றும் ஓடைகளை தூர்வாரி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளது. குன்னூரில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இருந்த போதும், நீரோடையை ஆக்ரமித்து கட்டிடங்கள் அதிகளவில் கட்டி வருகின்றனர்.

அது மட்டுமின்றி கட்டிட கழிவுகளை டன் கணக்கில் லாரி மூலம் ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் மழை நாட்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் ஆற்று வெள்ளம் புகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆற்றின் புனிதத்தை கெடுக்கும் சமூக விரோதிகளை சட்டப்படி தண்டிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: