பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் வெயிலின் தாக்கத்தால் கொப்பரை உலர வைப்பு பணிகள் மும்முரம்

*வெளியூருக்கு அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில், மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரிப்பு எதிரொலியாக, கொப்பரை உலர வைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதனால் உற்பத்தியும் வெளியூருக்கு அனுப்பும் பணியும் வேகமாக அதிகரித்து வருகிறது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயமே அதிகப்படியாக உள்ளது. தென்னையில் பறிக்கப்படும் தேங்காய் உரிக்கப்பட்டு, அதை பிரித்து எடுக்கப்படும் கொப்பரைக்கு வெளி மார்க்கெட்டில் அதிகளவில் கிராக்கி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் இருக்கும் போது, கொப்பரை உலர வைக்கும் பணி அதிகளவில் நடப்பது வழக்கமாக உள்ளது. இதில், கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையும், அதன்பின் வடகிழக்கு பருவமழையும் பெய்தபோது கொப்பரை உலர வைக்கும் பணி குறைந்து, உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவ மழைக்கு பிறகும் இந்த ஆண்டில் ஜனவரி துவக்கம் வரையிலும் பனிப்பொழிவு அதிகரிப்பால், கொப்பரை உலர வைக்கும் பணி மந்தமானது.

பின்னர், பிப்ரவரி துவக்கத்தில் இருந்து பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. இதையடுத்து, பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கொப்பரை உலர வைக்கும் பணி மீண்டும் அதிகமானது. கடந்த 3 மாதங்களாக மழையின்றி கொப்பரை உலர வைக்கும் பணி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல கிராமங்களில் பகல் மட்டுமின்றி வெயின் தாக்கம் போகும்வரை இரவுநேரத்திலும் கொப்பரை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதமாக மழையில்லாமல் கொப்பரை உலர வைக்கும் பணி தீவிரத்தால், அதன் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு மட்டுமின்றி வெளி மார்க்கெட்டுக்கும், விற்பனைக்காக அனுப்பப்படும் கொப்பரையின் அளவு அதிகமானது.கடந்த ஆண்டு தேங்காய் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25வரை மட்டுமே விற்பனையானது. இதனால், பலரும் கொப்பரை தொழிலுக்கு மாறி அதன் மூலம் தங்களது வருமானத்தை அதிகரித்து கொண்டனர்.

ஆனால் நடப்பாண்டில், மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் தேங்காய் உற்பத்தியும் குறைய துவங்கியுள்ளது. தற்போது 1 கிலோ தேங்காய் ரூ.33 முதல் ரூ.36 வரை விற்பனையாகிறது. தேங்காய் விலை அதிகரித்தாலும், கொப்பரைக்கு வெளி மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால், கொப்பரையாக உரித்து உலர வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், இதனால் வெளியூர்களுக்கு அனுப்பும் பணி அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் வெயிலின் தாக்கத்தால் கொப்பரை உலர வைப்பு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: