யுஎஸ் ஓபன் வெற்றியின் மூலம் இரட்டைச் சாதனை படைத்த கார்லோஸ்: இளம் சாம்பியன், புதிய நெம்பர் ஒன்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம்  டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது. அதில் வென்றால் பட்டம்,  கூடவே உலகின் நெம்பர் ஒன் அந்தஸ்து என்ற நிலையில்  நார்வே வீரர் கஸ்பர் ரூட் (23 வயது, 7வது ரேங்க்),  ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் (19 வயது, 4வது ரேங்க்)  ஆகியோர் மோதினர்.  

ஆட்டத்தில் இருவரும் அதிரடி காட்டினாலும், முடிவில்  6-4 , 2-6, 7-6(7-1) ,6-3என்ற  புள்ளிகள் கணக்கில்   கார்லோஸ்  செட்களை தனதாக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. எனவே 3 மணி 20 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தை 3-1 என்ற செட்களில் கஸ்பரை வீழ்த்தி தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கார்லோஸ்  வென்றார். கூடவே  இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் வென்ற சாதனையையும் அவர்  நிகழ்த்தினார். வெற்றிப்பெற்ற கார்லோசுக்கு கோப்பையுடன் இந்திய மதிப்பில் ரூ20.67கோடி, 2வது இடம் பிடித்த கஸ்பருக்கு கேடயத்துடன்  ரூ.10.35 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

* உலக ஏடிபி தர வரிசையில் முதல் இடத்தில் இருந்த ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ்,  யுஎஸ் ஓபனில் 4வது சுற்றிலேயே  தோற்று வெளியேறினார். அதனால் 1820 புள்ளிகளை இழந்த அவர் முதல் இடத்தையும் பறி கொடுத்துள்ளார். அதே நேரத்தில் சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் கூடுதலாக 1640 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறி உலகின் நெம்பர் ஒன் வீரராக மாறியுள்ளார்.

* இளம்(19) வயதில்  கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில்   ரபேல் நடால்(ஸ்பெயின், 2005),  பீட் சாம்பிராஸ்(அமெரிக்கா, 1990) ஆகியோருடன் கார்லோஸ் இணைந்துள்ளார்.

*  இளம் வயதில் யுஎஸ் ஓபன்  பட்டம் வென்ற வீரர் பெருமையை பீட் சாம்பிராஸ்(1990) உடன்  கார்லோஸ்(2022) பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

* 1973ல் தரவரிசை(ரேங்கிங்) முறை அறிமுகமான பிறகு இளம் வயதில் உலகின் நெம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் வீரர் என்ற பெருமையையும்   கார்லோசுக்கு சொந்தமாகி உள்ளது.

* டென்னிஸ் நால்வர்’ என்று அழைக்கப்படும்  பெடரர்(சுவிட்சர்லாந்து),  நடால்(ஸ்பெயின்), ஜோகோவிச்(செர்பியா),  மர்ரே(இங்கிலாந்து) ஆகியோரை தவிர்த்து சமீப காலங்கில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் மெத்வதேவ்(ரஷ்யா). அவரிடம் இருந்து இப்போது கார்லோஸ்  நெம்பர் ஒன் இடத்தை கைப்பற்றி உள்ளார்.

* கார்லோசின் பயிற்சியாளராக இருப்பவர் முன்னாள் நெம்பர் ஒன் வீரர் கார்லோஸ் பெர்ரேரோ(ஸ்பெயின்). இவர் 2003ம் ஆண்டு யுஎஸ் ஓபன் இறுதி ஆட்டத்தில் விளையாடிய பிறகுதான் உலகின் நெம்பர் ஒன் இடத்தை பிடித்தார். ஆனால் அந்தப் போட்டியில் 2வது இடத்தைதான்  பெர்ரேரோ பிடித்தார். அந்த 2003ம் ஆண்டுதான் இப்போதைய நம்பர் ஒன் வீரர் கார்லோஸ் பிறந்தார்.

Related Stories: