போடி அருகே தர்மத்துப்பட்டியில் ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமான பெருமாள் கோயில் ஊரணி-மீட்க விவசாயிகள் கோரிக்கை

போடி : போடி அருகே தர்மத்துப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கி மாயமான பெருமாள் கோயில் டிரஸ்ட் ஊரணியினை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.போடி அருகே தேவாரம் சாலையில் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது தர்மத்துப்பட்டி கிராமம்.இங்கு ஆயிரம் பேருக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். விவசாயமும், கூலி வேலையும் இவர்களின் பிரதான வருமானம் தரும் தொழில்களாக உள்ளன. மேலும், இப்பகுதி மக்கள் ஆடு, மாடுகள் என கால்நடை வளர்ப்பையும் உப தொழிலாக தொடர்ந்து வருகின்றனர்.

தர்மத்துப்பட்டிக்கு தெற்குத்திசையில் சில்லமரத்துப்பட்டி செல்லும் சாலையில் சுமார் ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள நிலப்பரப்பில் பெருமாள் கோயில் டிரஸ்ட் ஊரணி உருவாக்கப்பட்டிருந்தது. நூற்றாண்டு கடந்த இந்த ஊரணிக்கு மேற்கு திசையில் பொன்னம்மன் கோயில் ஓடை பகுதி உள்ளது, பலத்த மழையின்போது இதன் வழியாக பெருகி வரும் மழைநீர் இந்த ஊரணியை நிறைக்கும்.

இதில் தேங்கும் மழைநீரால் சுற்றியுள்ள கிணறுகளுக்கு நிலத்தடி நீர் பெருகவும், அதைக் கொண்டு சுற்றியுள்ள சுமார் 200க்கும் மேற்பட்டோரின் நிலங்களில் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யவும் வசதியாக அமைந்தது. மேலும் கிராம மக்களுக்கு மிகப்பெரிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஊரணி விளங்கியது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மேய்ச்சலுக்காக விடும் ஆடு, மாடுகள் இந்த ஊரணியில் இறங்கி தாகம் தீர்ப்பதும் வழக்கமானதாக இருந்தது.

இந்நிலையில் பருவகால மாற்றத்தின் காரணமாக ்இப்பகுதி வறட்சியின் பிடியில் சிக்கிய நேரங்களில் இந்த ஊரணிக்கு மழைநீர் கொண்டு வரும் கால்வாய்கள் காணாமல் போயின. இதனால் ஊரணிக்கான நீர் வரத்து படிப்படியாக குறைந்து முடிவில் இல்லாமல் போனது. இதையடுத்து பலரும் இந்த ஊரணியினை சிறிது, சிறிதாக ஆக்கிரமிக்கத்ெதாடங்கினர். இதனால் தற்போது அந்த ஊரணி காணாமல் போனது.

இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர் ஆக்கிரப்பில் சிக்கி மறைந்து போன 286/4 என்ற சர்வே எண் கொண்ட ஊரணியை மீட்க வேண்டும். இதற்கு அப்பகுதியினை முறையாக ஆய்வு செய்து கரைப்பகுதிகளை உயர்த்தி கட்டமைத்து மீண்டும் ஒரு முழுமையாக ஊரணியை மீட்டுவர வேண்டும். இதன் வாயிலாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே காணாமல் போன ஊரணியை மீட்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் போடி தாசில்தார் அலுவலகத்திலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தற்போது ஊரணி மீட்பு பணிகளை அதிகாரிகள் தொடங்குவார்கள் என்று இப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து தருமத்துப்பட்டி விவசாயி முருகவேல் கூறும்போது, ‘‘பெருமாள் கோயில் டிரஸ்ட் ஊரணிகாணாமல் போய் விட்டது. ஏனெனில் ஊரணியின் நிலத்தை இங்குள்ள பலரும் ஆக்கிரமித்துக்கொண்டனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் பெருக வழியின்றி இருக்கிறது.

 இப்பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு தற்போது புகார் அனுப்பினோம். இதையடுத்து ஊரணி பகுதிகளை ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் அதிகாரிகள் பணிகளை தொடங்காமல் தாமதம் செய்கின்றனர். எனவே இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: