மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிக குறைவான அளவே மின் கட்டணம் உயர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கரூர்: மற்ற   மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிக குறைவான அளவிலேயே மின் கட்டணம்   உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர்   செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி   நேற்று அளித்த பேட்டி: தமிழக மின்வாரியம் கடந்த 10   ஆண்டுகளாக ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் சுமையில் தத்தளித்து வந்தது.   மேலும் ஆண்டுக்கு ரூ. 16,511 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில்   உள்ளது. இவ்வாறுள்ள நிலையில் இந்திய அரசும் ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையமும்   நிதி நிறுவனங்களும் தமிழக அரசுக்கு மின் கட்டணத்தை உயர்த்த நிர்ப்பந்தமும் பலமுறை கடிதங்கள் அனுப்பியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 15   மாதங்களாகியும் மின் கட்டணத்தை உயர்த்தாமல் உரிய வளர்ச்சிக்காக பல்வேறு   திட்டம் வகுத்து அரசின் நிதியிலிருந்து ரூ.9,000 கோடி  மானியமாக தந்து மின்   வாரியத்தை காப்பாற்றி வந்தார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வு என்பது  மற்ற  மாநிலங்களை விட மிகவும் குறைவான அளவில் மட்டுமே மாற்றி   அமைக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் தமிழக அரசிற்கும், தமிழ்நாடு   மின்சார வாரியத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முதல் 100   யூனிட் மின்சாரம் இலவசம் என்பதால் அடித்தட்டு மக்கள் பாதிக்காத வகையில்    மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில்   கர்நாடகத்தில் 1 முதல் 100  யூனிட்டிற்கு ரூ.4.30, குஜராத்தில் ரூ.5.25 என  அரசு நிர்ணயித்துள்ளது. மின்வாரியத்தின் பரிந்துரையின்படி 0 முதல் 50 வாட்  வரை  மின்பளு கொண்ட மின் நுகர்வோருக்கு நிலையான கட்டிடங்கள் மாதம்  ஒன்றிற்கு ஒரு  கிலோ வாட் ரூ.100 லிருந்து 75ஆக குறைக்கப்பட்டுள்ளது. 50  முதல் 100 கிலோ  வாட் வரை மின்பளு கொண்ட மின் நுகர்வோருக்கு நிலையான  கட்டணங்கள் மாதம்  ஒன்றிற்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.325ல் இருந்து 150ஆக  குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 100 முதல் 112  கிலோவாட் வரை  நிலைக்கட்டணம்  ரூ.600ல்  இருந்து  ரூ.150ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற  மாநிலங்களோடு  ஒப்பிடுகையில் தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் குறைவு  என்பதால் பிற  மாநிலங்களிலிருந்து முன்னணி நிறுவனங்கள் தொழில்  தொடங்குவதற்கு தமிழகத்தில்  போட்டி போட்டு வருகின்றது. பொதுமக்கள் தமிழக  அரசுக்கும் மின்வாரியத்திற்கும்  ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Related Stories: