செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது.

இங்கு காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் கோயிலில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களுக்குமான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு, கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று மாலை 5.21 மணியளவில் நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதையடுத்து கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு விநாயகர் பூஜை மற்றும் தீபாராதனையும், அதைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு மகா அபிஷேகமும் நடந்தது.

பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பொம்மனப்பாடி, குரூர், சிறுவயலூர், மாவிலிங்கை, பெரகம்பி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

The post செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.

Related Stories: