5ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; வேலூரில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் சுட்டது: காஞ்சிபுரம், திருத்தணியில் 108, சென்னையில் 105 டிகிரி பதிவானது

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று வேலூரில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது. 22 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் இருந்தது. வரும் 5ம் தேதி வரை வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் 4ம் தேதி தொடங்கி 25 நாட்கள் நீடிக்க உள்ளது. முன்னதாகவே தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் நேற்று 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது. ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 109 டிகிரி, காஞ்சிபுரம், திருத்தணி 108 டிகிரி, தர்மபுரி 106 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 105 டிகிரி வெயில் நிலவியது. வெப்பநிலை என்பது இயல்பைவிட 3 டிகிரிக்கும் மேல் இருந்தது. இது தவிர சராசரியாக 20 மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதற்கும் மேலாக வெயில் அளவு பதிவானது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதே நிலை 7ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி முதல் படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று(2ம் தேதி) 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும், 3ம் தேதி பெரும்பாலான மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், 5ம் தேதி வரை வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.

The post 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும்; வேலூரில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் சுட்டது: காஞ்சிபுரம், திருத்தணியில் 108, சென்னையில் 105 டிகிரி பதிவானது appeared first on Dinakaran.

Related Stories: