துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடனான சூப்பர்-4 சுற்று லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய விராத் கோஹ்லி 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சதம் விளாசி அசத்தினார். சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி கண்ட இந்திய அணி, பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில் நேற்று சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கான் முதலில் பந்துவீசியது. ராகுல், கோஹ்லி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 119 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ராகுல் 62 ரன் (41 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேறினார். சூரியகுமார் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பன்ட் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ளிய கோஹ்லி 1,019 நாட்களுக்கு பிறகு சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
