நெல்லையில் 2597 பேருக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித் தொகை-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

நெல்லை : தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 உயர்கல்வி உதவித் தொகை 2 ஆயிரத்து 597 பேருக்கு வழங்கும் திட்டத்தை நெல்லையில் தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.தமிழக அரசு உயர் கல்வி பயிலும் பெண்கள் பயன் பெறும் வகையில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை சென்னையில் நேற்று நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் நடந்த விழாவில் கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்எல்ஏ.,  மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே. ஆர். ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு, புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்து  மாணவிகளுக்கு வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார். தமிழக அரசின் உயர்ல கல்வி வேலைவாய்ப்பு மலர் மற்றும் நிதி விழிப்புணர்வுக் கையேடு அடங்கிய பரிசு பெட்டகங்களும் விழாவில் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பொறியியல் பயிலும் 339 மாணவிகள், மருத்துவம் பயிலும் 138 மாணவிகள், வேளாண்மை பயிலும் 9 மாணவிகள், கால்நடை மருத்தும்  பயிலும் 6 மாணவிகள், சட்டம் பயிலும் 27 மாணவிகள், கலை மற்றும் அறிவியல் பயிலும் 2 ஆயிரத்து 50 மாணவிகள் மற்றும் தொழிற்கல்வி பயிலும் 28 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 597 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர்.  துவக்க விழா நிகழச்சியில் மட்டும் 544 மாணவிகளுக்கு வங்கி பண பரிவர்த்தனை  அட்டைகள் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ்  அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில்  இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று படிக்கும் வரை மாதம் ரூ.1000 அவா்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

விழாவில் பாளையங்கோட்டை யூனியன் சேர்மன் தங்கப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசெல்லையா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ ஐயப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக் ஜூடு, சாராள் தக்கர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின், ராணி அண்ணா கல்லூரி முதல்வர் மைதிலி மற்றும் அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: