கடைசி ஓவர் நெருக்கடிக்கு தயாராகவே இருந்தேன்...; ஹர்திக் பாண்டியா உற்சாகம்

ஆசிய கோப்பை டி20 தொடரில், பாகிஸ்தான் அணியுடன் நேற்று முன்தினம் மோதிய இந்தியா பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த போட்டியில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட் வீழ்த்தியதுடன், ஆட்டமிழக்காமல் 17 பந்தில் 33 ரன் எடுத்து அசத்தினார். 3 பந்தில் 6 ரன் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் கொஞ்சமும் பதற்றம் அடையாமல் அமர்க்களமாக சிக்சர் விளாசியது அனைவரது பாராட்டுகளையும் அள்ளியது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஹர்திக் கூறியதாவது: இது போன்ற இலக்கை துரத்தும்போது ஒவ்வொரு ஓவராக திட்டமிட்டு விளையாட வேண்டியது அவசியம். கடைசி கட்டத்தில் யார் பந்துவீசுவார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தேன். கடைசி ஓவரில் எங்களுக்கு 7 ரன் தான் தேவைப்பட்டது. அது 15 ரன்னாக இருந்தாலும் கூட, அந்த சவாலை சந்திக்க நான் தயாராகவே இருந்தேன்.

20வது ஓவரில் என்னை விட பந்துவீச்சாளருக்கே அதிக அழுத்தமும் நெருக்கடியும் இருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால், எந்தவித பதற்றமும் இல்லாமல் இயல்பாக விளையாட முயற்சித்தேன். பந்துவீச்சிலும் எனது பலம் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டேன். இவ்வாறு ஹர்திக் கூறினார். ஏ பிரிவில் முதல் இடத்தில் உள்ள இந்தியா, தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை ஹாங்காங் அணியை சந்திக்கிறது.

Related Stories: