ஒரே நாடு, ஒரே உரம் திட்டம்: உர மூட்டையில் ‘பாரத்’ பெயர் கட்டாயம்

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே உரம் என்ற அடிப்படையில் உர மூட்டையில் பாரத் என்ற பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதால் உர தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் உரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாடு முழுவதும் உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ‘பாரத்’ என்ற பொதுவான பெயரிலேயே உரத்தை விற்பனை செய்ய வேண்டும்.

பேக்கிங்கில் தங்களது நிறுவனத்தின் பெயரை எங்காவது ஓரிடத்தில் பிரிண்ட் செய்யலாம். யூரியாவாக இருந்தால், ‘பாரத் யூரியா’ என்று பெரிய அளவில் பையில் எழுத வேண்டும். டி-அம்மோனியம் பாஸ்பேட் என்றால் ‘பாரத் டிஏபி’ என்று எழுத வேண்டும். மானிய உரப் பையில் ‘பிரதான மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா (பிஎம்பிஜேபி) மிகப்பெரிய அளவில் பிரிண்ட் செய்திருக்க வேண்டும். தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் புதிய சாக்கு மூட்டைகளை பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே மறுசுழற்சி செய்யப்பட்ட பைகளை டிசம்பர் 12ம் தேதி வரை மட்டுமே பயன்படுத்த ேவண்டும். உரத்தின் பையில் மூன்றில் இரண்டு பங்கு புதிய பிராண்ட் பெயர் மற்றும் பிஎம்பிஜேபி லோகோவாகவும், மூன்றில் ஒரு பங்கு உர நிறுவனங்களின் பெயர், லோகோ  மற்றும் பல்வேறு விதிகள் மற்றும் தேவைப்படும் பிற தகவல்களைப்  பயன்படுத்த வேண்டும்.

 விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதை உறுதி செய்யவும், போக்குவரத்து நேரத்தை குறைக்கவும் இந்த புதிய நடைமுறை உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகேஎஸ் போன்றவற்றுக்கான ஒற்றை பிராண்ட் பெயரில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவால் உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. மேலும் உர விற்பனை சந்தையில் தங்களது நிறுவன பிராண்டின் தனித்துவம் பாதிக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘அனைத்து உரங்களையும் ஒரே பிராண்டின் கீழ் விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. சுயவிளம்பரத்திற்காக செய்யப்படுகிறது. ஒரு நாடு, ஒரு மனிதன், ஒரு உரம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: