எம்எல்ஏ வீட்டு காதணி விழா மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

பேராவூரணி: பேராவூரணியில் நடந்த மொய்விருந்தில் ரூ.10 கோடி வசூலானது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரிடையே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொய் என்ற பழக்கம் இன்று சாதி, மத சமய எல்லைகளை கடந்து அனைவருக்கும் பொதுவான நிகழ்வாக மாறியுள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி தொகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் நெடுவாசல், அனவயல், வடகாடு உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமாக மொய் விருந்து நடைபெறுகிறது. ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடைபெற்ற மொய்விருந்து கொரோனாவிற்கு பிறகு எல்லா மாதங்களிலும் பரவலாக நடைபெறுகிறது. ஆரம்ப காலங்களில் காதணி, திருமண விழாக்களில் மட்டுமே வாங்கப்பட்ட மொய், சிறிது காலத்திற்கு பின் மொய் விருந்து விழா என்றே அழைப்பிதழ் அச்சிடப்பட்டு மொய் வாங்கப்படுகிறது.

இந்நிலையில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் அவரது பேரன்கள் காதணி விழா மொய் விருந்து நடத்தினார். பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ரூ.10 கோடி வரை மொய் செய்தனர். காதணி விழாவிற்கு வந்தவர்களுக்கு 1300 கிலோ கறி சமைத்து ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் விருந்து பரிமாறப்பட்டது. 10 ஆயிரம் பேர் விருந்து சாப்பிட்டனர். மொய் எழுதுவதற்கு மட்டும் 15 இடங்களில் ஆட்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு நிறுவன ஆட்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தனர். விழா அரங்கில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.எம்எல்ஏ வீட்டு காதணி விழா என்றதும் பேராவூரணி தொகுதியின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டனர்.

Related Stories: