வேதாரண்யம்: வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (31ம் தேதி) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு ைமயம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது.
கோடியக்கரையில் கடல் சீற்றம் காரணமாக பைபர் படகுகளை சேர்ந்த 5,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரைகளில் பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதி கடற்கரைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
