சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்சியா சாம்பியன்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடந்த வெஸ்டர்ன் & சதர்ன் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவுடன் (32 வயது, 21வது ரேங்க்) மோதிய கார்சியா (28 வயது, 17வது ரேங்க்) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக, டபுள்யு.டி.ஏ 1000 அந்தஸ்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் தகுதிநிலை வீராங்கனை என்ற சாதனை கார்சியா வசமானது. நடப்பு சீசனில் 3வது பட்டம் வென்றுள்ள அவர், தனது டென்னிஸ் வாழ்க்கையில் இதுவரை மொத்தம் 10 சாம்பியன் பட்டங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்னா அசத்தல்: சின்சினாட்டி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் குரோஷியா வீரர் போர்னா சோரிச் (25 வயது, 29வது ரேங்க்) சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் கிரீஸ் நட்சத்திரம் ஸ்டெபனோஸ் சிட்சிபாசுடன் (24 வயது, 5வது ரேங்க்) மோதிய போர்னா 7-6 (7-0), 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 57 நிமிடத்துக்கு நீடித்தது. மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து ஏடிபி தொடரில் போர்னா முதல் முறையாக சாம்பியனாகி உள்ளார்.

Related Stories: