வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ஒன்டே; 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி.! 2-1 என தொடரை கைப்பற்றியது

பிரிட்ஜ்டவுன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டியில் வெ.இண்டீசும், 2வது போட்டியில் நியூசிலாந்தும் வென்ற நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப்- கைல் மேயர்ஸ் முதல் விக்கெட்டிற்கு 173 ரன் சேர்த்தனர்.

ஷாய் ஹோப் 51 (100 பந்து), கைல் மேயர்ஸ் 105 ரன் (110பந்து, 12பவுண்டரி, 3 சிக்சர்) அடித்து ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சருடன் 91 ரன் விளாசினார். 50 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 301 ரன் எடுத்தது. அல்சரி ஜோசப் 6 பந்தில், ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன் எடுத்து களத்தில் இருந்தார். நியூசிலாந்து பவுலிங்கில் டிரன்ட் போல்ட் 3, சான்ட்னர் 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 3 ரன்னில் வெளியேற மார்ட்டின் கப்டில் 57 (64பந்து), டேவன் கான்வே 56(63பந்து), கேப்டன் லதாம் 69 (75பந்து), டேரில் மிட்செல் 63 (49பந்து) ரன்னில் வெளியேறினர்.

பின்னர் வந்த ஜேம்ஸ் நீஷம் அதிரடி காட்டி சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். 47.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன் எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது. ஜேம்ஸ் நீஷம்11பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 34, மைக்கேல் பிரேஸ்வெல் 14 ரன்னில் களத்தில் இருந்தனர். லதாம் ஆட்டநாயகன் விருதும், சான்ட்னர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். ஏற்கனவே நடந்த டி.20 தொடரையும் 2-1 என நியூசிலாந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: