மனைவி, மகன்கள் கைவிட்டதால் பிச்சையெடுத்த மாஜி ஏட்டுக்கு மறுவாழ்வு; எஸ்பி உத்தரவையடுத்து நடவடிக்கை

திங்கள்சந்தை: மனைவி, மகன்கள் கைவிட்டதால் பிச்சை யெடுத்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டுக்கு போலீசார் மூலமே மறுவாழ்வு கிடைத்துள்ளது

கருங்கல்  அருகே தெருவுக்கடை அடுத்த பூட்டேற்றியை சேர்ந்தவர் விக்ரமன் (60). போலீஸ்  ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சித்ரா. கேரள மாநிலம்  காட்டாக்கடை பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து  வருகிறார். இதனால் விக்ரமன் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார்.  இவர்களுடைய 2 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. ஒரு மகன் வெளிநாட்டிலும்,  மற்றொரு மகன் சென்னையிலும் வசிக்கின்றனர்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளிலும் போலீசாக பணிபுரிந்துள்ள விக்ரமன், கடந்த 3 ஆண்டுகளுக்கு  முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு ஓய்வூதியம்  பெற்று வந்தார். இந்த நிலையில் மனைவி மற்றும் 2 மகன்களும் விக்ரமனை கைவிட்டதாக  கூறப்படுகிறது. அவர் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திங்கள்சந்தைக்கு வந்தார். ஆனால் ஓய்வூதிய பணத்தை அபகரிப்பதற்காக 2 மகன்களும்  நைசாக பேசி விக்ரமனிடம் இருந்து ஏடிஎம் கார்டையும் பறித்துள்ளனர். இதனால்  வருமானமின்றி தவித்த விக்ரமன் வேறு வழியின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டார். போலீசில் கம்பீரமாக பணியாற்றியவர்  கைகூப்பி யாசகம்  பெற்று பசியாற்றினார்.

இந்த தகவலறிந்து எஸ்பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்படி, போலீசார் விக்ரமனை நேற்று காலை  நேரில் சந்தித்து விசாரித்தனர். அவருக்கு டீ மற்றும் டிபன்  வாங்கி கொடுத்தனர். சலூனுக்கு அழைத்து சென்று அவருக்கு முடி மற்றும்  தாடி சவரம் செய்யப்பட்டது. இதனால் அவர் பழைய கம்பீர தோற்றத்துக்கு மாறினார். இது குறித்து போலீசார் கூறுகையில், முதற்கட்டமாக விக்ரமனை  குளச்சல் டிஎஸ்பி கேம்ப் ஆபீசில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அவரின் மனைவி சித்ரா மற்றும் மகன்களை தொடர்புகொண்டு விக்ரமனின் நிலை  குறித்து தெரிவிக்கப்படும். முடிந்தவரையில் அவரின் குடும்பத்தினரிடம்  விக்ரமன் ஒப்படைக்கப்படுவார். இல்லாதபட்சத்தில் முதியோர் காப்பகத்தில்  சேர்க்கப்படுவார் என கூறினர். பிச்சையெடுத்த மாஜி போலீஸ் ஏட்டு  விக்ரமனுக்கு இதன்மூலம் மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவர் போலீசாரிடம் கண்ணீர்  மல்க நன்றி தெரிவித்தார்.

Related Stories: