25ல் இலங்கை வருவதாக தகவல் கோத்தபயவுக்கு உதவ ரணிலுக்கு அழுத்தம்

கொழும்பு: தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்பி வருவதற்கான உதவிகளை செய்யும்படி அதிபர் ரணிலிடம் ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடி சிக்கி தவித்ததால், அதிபர் பதவியில் இருந்து விலகக் கோரி மக்கள் நடத்திய போராட்டதால் கோத்தபய ராஜபக்சே கடந்த மாதம் நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு சென்றார். அங்கும் எதிர்ப்பு வலுத்ததால், சிங்கப்பூர் சென்று தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். சிங்கப்பூரிலும் 30 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி மறுக்கப்பட்டதால், தாய்லாந்து சென்றார். தற்போது, பாங்காக்கில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். நவம்பர் வரையில் இங்கு அவர் தங்க திட்டமிட்ட நிலையில், வரும் 25ம் தேதி இலங்கை திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி, அதிபர் ரணிலை சந்தித்து ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர்.

* அமெரிக்க கிரீன் கார்டுக்கு விண்ணப்பம்   

கடந்த 1998ல் அமெரிக்கா சென்ற கோத்தபய, அந்நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வந்தார். 2005ம் ஆண்டு இலங்கை திரும்பிய அவர், 2019ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமை கைவிட்டார். தற்போது அவர், அமெரிக்காவில் வசித்து வரும் தனது மனைவி, மகனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, அமெரிக்காவின் கிரீன் கார்டை பெறுவதற்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: