ஏலச்சீட்டு கம்பெனி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

ஏலச்சீட்டில் சேர்ப்பதற்குமுன் உறுப்பினர் பற்றிய முழு விபரத்தை நேரில் சென்று, கள ஆய்வு செய்ய வேண்டும். முகவரி சரியாக உள்ளதா?, அடையாளசான்று சரியாக உள்ளதா ? என்பதை அறிந்து கொள்ளவேண்டும். ஏலச்சீட்டில் சேர்பவர், ஏலம் எடுத்த பின்பு கம்பெனியில் இருந்து ஏலத்தொகை பெறுவதற்கு தக்க ஜாமீன் கொடுப்பதற்கு தகுதி உள்ளவரா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏலச்சீட்டில் சேர்பவர், அவரது குடும்பத்தில் அவரை சார்ந்து எத்தனை நபர்கள் உள்ளனர்?. அவரது வருமானம் எவ்வளவு? சந்தா தொகையை சரிவர கட்டுவதற்கு தகுதி உள்ளவரா? என்பதை ஆதாரத்துடன் பார்க்க வேண்டும். குடும்பத்தில் வேறு யாராவது ஏலச்சீட்டில் சேர்ந்த விபரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சந்தாதாரருக்கும் முறைப்படி 1982-ம் ஆண்டு சிட்பண்டுகள் சட்டப்படி உள்ள விதியின்படி சீட்டு ஒப்பந்தம் செய்த பின்புதான் ஏலச்சீட்டில் சேர்க்க வேண்டும்.

ஏலம் எடுத்த பின்பு, ஏலம் எடுத்த சீட்டு மாதத்திலிருந்து பின்வரும் காலங்களுக்கு உள்ள தவணை தொகையினை கணக்கிட்டு இரு மடங்கு மதிப்புள்ள ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சந்தாதாரர்கள் பற்றி முழு விபரங்களை தெரிந்துகொண்டு ஏலச்சீட்டில் உறுப்பினராக சேர்த்துகொள்வது மிகவும் நல்லது. ஒவ்வொரு சந்தாதாரருக்கும், வாரிசுதாரர், நாமின் விபரம் அடங்கிய குறிப்புகளை முறைப்படி கம்பெனியில் பதிவு செய்வது மிகவும் அவசியம்.

ஒவ்வொரு மாதமும் ஏலம் எடுத்தவர் விபரம், ஏலத்தொகை மற்றும் பெற்றுக்கொண்ட ஜாமீன் இவைகளை அந்தந்த தேதிக்குள் சீட்டுப்பதிவு அலுவலகத்தில் காலத்தை கடத்தாமல் தெரிவித்து பைல் செய்வது அவசியம். ஒவ்வொரு ஏலச்சீட்டிற்கும் நுழைவுக் கட்டணம் அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிக வாக்குறுதிகளைக் கொடுத்து உறுப்பினர்களை சேர்ப்பது மிகவும் ஆபத்து. ஒவ்வொரு கிளை துவங்கும்போது சீட்டுப்பதிவாளரிடன் அனுமதி அவசியம் பெற வேண்டும்.

உறுப்பினர்கள் பற்றிய முழு விபரத்தினை சட்டப்படி வாங்கும்போது சீட்டு பதிவாளரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆணை வாங்கும் முன் வங்கி ஒன்றில் சீட்டின் மதிப்பிற்கு நிரந்தர வைப்பு சீட்டு குரூப் முடியும் காலம் ஒரு மாதம் சேர்த்து கணக்கிட்டு நிரந்தர வைப்பு செய்து தக்க ரசீதினை சீட்டுப்பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். சீட்டு பதிவாளர் அலுவலகம் எந்த வங்கியில் நிரந்தர வைப்பு போட சொல்கிறார்களே அதே வங்கியில்தான் பணம் டெபாசிட் போடவேண்டும்.

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை உறுப்பினர்களின் முகவரி மற்றும் அனைத்து விபரங்களை நேரில் சென்று சரி பார்த்தால்தான் சீட்டு நடத்தும் நிறுவனத்திற்கு பாதுகாப்பு. இந்த விதிமுறைகளை பின்பற்றினால் எந்த சீட்டு நிறுவனமும் கண்டிப்பாக நலிவடைய வாய்ப்பு ஏற்படாது.

Related Stories: