கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம்...

திருவனந்தபுரம் : கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 வது நாளாக மீனவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். விழிஞ்சம் துறைமுகம் என்பது சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்கும் பணி விழிஞ்சம் கடற்கரையில் துவங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த திட்டம் கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியில் அமைக்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்ட போது பெரும்பாலான மீனவர்கள் எதிரிப்பு தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து கேரளாவிற்கு இடம் பெயர்ந்தது. அங்கு விழிஞ்சம் பகுதியில் துறைமுகத்திற்கு ஆரம்ப கட்டத்தில் எதிர்ப்பு இல்லாத நிலையில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த கட்டுமான பணியை தொடங்கிய பிறகு கடற்கரை கிராமங்களில் உள்ள சாலைகள் மற்றும் வீடுகள் முழுவதுமாக கடல் சீற்றத்தால் மிகவும் சேதம் அடைந்து வருகிறது.

எனவே, நாளுக்கு நாள் இந்த திட்டத்தின் பணி நடைபெற்று வருவதால் கடற்கரை ஓரங்களில் உள்ள கிராமங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் என்பதால் கடந்த 3 நாட்களாக மீனவர்கள் விழிஞ்சம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் அதானி குழுமத்திற்கு எதிராகவும் இந்த போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஒட்டுமொத்த கிறிஸ்தவ பாதிரியார்களும், கிறிஸ்துவ மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த போராட்டத்திற்கு கரிக்குளம், பூவார், பொழியூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் விழிஞ்சம் நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், விழிஞ்சம் கடற்கரையில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த திட்டத்தை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் அதானி குழுமத்தின் துறைமுக கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories: