அண்ணாசாலையில் ரகளை மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்களுக்கு வலை

சென்னை: ஓடும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கி மாநகர பேருந்து நேற்று காலை சென்றது. பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்து என்பதால், பேருந்தில் அதிகளவில் பயணிகள் கூட்டம் இருந்தது. அப்போது, பல்லவன் இல்லம் அருகே 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி ஆட்டம் பாட்டத்துடன் பாடல்கள் பாடி ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.

இதை பேருந்தில் பயணம் செய்த பெண்கள் பலர் மாணவர்களை கடுமையாக கண்டித்தனர். பேருந்து அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மாணவர்கள், தங்களை பேசிய பெண்களை கேலி செய்தப்படி சாலையோரம் இருந்த மதுபாட்டிலை எடுத்து பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடினர்.

பேருந்து கண்ணாடி திடீரென உடைந்ததால் பணியகள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள் மீது ஓட்டுனர் ராஜேந்திரன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்படி போலீசார் சிசிடிவி மூலம் கல்லூரி மாணவர்களை தேடுகின்றனர்.

Related Stories: