சான்றிதழை போலி என்று உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம்: 20 ஆண்டுகளாக ஏமாற்றிய போலி வழக்கறிஞர் கைது...

சென்னை : சென்னை உயர்நீதி மன்றத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்து வழக்கறிஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொளத்தூரை சேர்ந்த சாந்தி என்பவர் தான் தத்தெடுத்த மகனை ஒப்படைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் பல கோடி சொத்துக்காக ரம்யா என்பவரும் அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் பாபு என்பவரும் தன் மகனை கடத்தி சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார். ஆட்கொணர்வு மனு கடந்த ஜூலை 28 தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பாபு என்பவர் தான் ஒரு வழக்கறிஞர் எனவும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டவியல் பட்டம் பெற்றதாக ஒரு போலி சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். மேற்படி சான்றிதழை போலி என்று உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் பாபு மீது குற்ற வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் விசாரணையை நடத்திய போலீசார் தஞ்சாவூர் மாவட்ட மானாங்கோரை  என்ற இடத்தில் பதுங்கியிருந்த பாபுவை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 12ஆம் மட்டுமே படித்த பாபு சென்னையில் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞர் என்ற போர்வையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுப்பட்ட வந்ததும் விசிட்டிங் கார்டில் பார் கவுன்சில் பதிவு எண் என போலியான எண்ணை பதிவிட்டு மற்றவர்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. தொழில் பாதுகாப்புக்கு அரசியல் தொடர்பும் வேண்டும் என்பதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாவட்ட பொறுப்பில் இருந்ததாகவும் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். இவரிடம் ஏதாவது வழக்குகள் வந்தால் வேறு வழக்குகளை தான் நடத்தி வருவதாக கூறி தனக்கு தெரிந்த வழக்கறிஞர்களிடம் அனுப்பி வைத்ததும் தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் எனக்கூறி மோசடி செய்த பணத்தில் சென்னை அண்ணா நகரில் ஒரு வீடும், தஞ்சை மாவட்டத்தில் அவரது சொந்த கிராமத்தில் சொத்துக்களையும் வாங்கி குவித்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என அறிய காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.                

Related Stories: