சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை அற்பமாக கருதும் ஒன்றிய அரசு: சோனியா காந்தி கடும் கண்டனம்

புதுடெல்லி: ‘சுதந்திரபோராட்ட வீரர்கள் செய்த தியாகத்தை சுயநலம் கொண்ட ஒன்றிய அரசு அற்பமாக கருதுகின்றது’ என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 75 ஆண்டுகளில் நாம் மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளோம். ஆனால் இன்றைய சுயநல அரசு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் புகழ்பெற்ற சாதனைகளையும் அற்பமாக கருதுகிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பது, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் அபுல் கலாம் ஆசாத் போன்ற தலைசிறந்த தலைவர்களை அரசியல் ஆதாயங்களுக்காக பொய்யின் அடிப்படையில் களத்தில் நிறுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டர் பதிவில், ‘நாங்கள் மிகவும் நேசிக்கும் தாய்மண் பழமையானது, நிரந்தரமானது, எப்போதும் புதிதாக இருக்கக்கூடியது. இதற்கு நாங்கள் மரியாதைக்குரிய வணக்கத்தை செலுத்துகிறோம், ஜெய்ஹிந்த்’ என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த நாளில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள், பொதுமக்கள் மற்றும் தலைவர்களை நினைவு கூர வேண்டும். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு  செல்வதற்கு நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: