வடிவேலு பட பாணியில் ஓட்டி பார்ப்பதாக கூறி ஜீப் அபேஸ்

சென்னை: ‘ஜனனம்’ திரைப்படத்தில், நடிகர் வடிவேலுவின் காமெடி பிரசித்தமானது. மொபட்டை விற்க வருபவரிடம் இருந்து வண்டியை ஓட்டி பார்ப்பதாக கூறி வண்டியுடன் ஒருவர்  கம்பி நீட்டி விடுவார். இதனால் வண்டி உரிமையாளரிடம் வடிவேலு சிக்கிக்கொண்டு தவிப்பார். இதேபோன்ற சம்பவம் தற்போது சென்னையில் நடந்துள்ளது. சென்னை பாடி மேம்பாலம் அருகே சாய் கார் செலக்‌ஷன் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கும் ஷோரூம் உள்ளது. இதன் உரிமையாளர் சவுந்தரபாண்டியன் (51). நேற்று முன்தினம் மாலை இந்த ஷோரூமுக்கு வந்த ஒருவர், அங்கிருந்த ஹோண்டா சிட்டி காரை வாங்கப்போவதாக தெரிவித்துள்ளார். பின்னர், அந்த காரை எடுத்து ஓட்டி பார்த்துள்ளார்.

அவருடன் ஷோரும் ஊழியர் தனீஷ் உடன் இருந்துள்ளார். அப்போது, 90களில் வெளிவந்த ஜீப்பை மறு வடிவம் செய்து விற்பனைக்காக வெளியில் நிறுத்தி இருந்துள்ளனர். இதை பார்த்த அந்த நபர், அந்த ஜீப்பின் விவரங்களை பற்றி கேட்டபோது, ₹8 லட்சம் என்று ஷோரூம் ஊழியர் தெரிவித்துள்ளார். அதையும் ஓட்டிப் பார்க்க வேண்டும், என கூறிய அவர், ஊழியர் தனீஷுடன் அந்த ஜீப்பையும் ஓட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது, வழியில் ஒரு திருமண மண்டபம் அருகே சென்றதும் ஜீப்பை நிறுத்திய அந்த நபர், மண்டபத்தின் மேனேஜர் எனது உறவினர். அவரை பார்த்துவிட்டு வந்துவிடலாம் வாருங்கள் என, ஷோரூம் ஊழியருடன் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், ஜீப்பில் எனது போனை மறந்து வைத்துவிட்டேன். அதை எடுத்துவிட்டு வந்துவிடுகிறேன், நீங்கள் இங்கேயே இருங்கள் என ஷோரூம் ஊழியரிடம் கூறிய அந்த நபர், ஜீப்புடன் மாயமானார். இதுகுறித்து ஷோரூம் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, கார் ஷோரூமில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஜீப்பை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: