6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர் கலந்துரையாடல்; நீதமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

ஊத்துக்கோட்டை: ஆறு வழிச்சாலை சம்மந்தமாக விவசாயிகளுடன் விவசாய சங்க மாநில தலைவர்  பி.ஆர்.பாண்டியன் கலந்துரையாடினார். திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் - முதல் ஆந்திர மாநிலம்  சித்தூர் வரை  128 கி.மீ.தூரத்திற்கு ரூ. 3200 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தமிழக அரசும், ஆந்திர அரசும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்தில் மட்டும் 6 வழிச்சாலைக்காக 18 கிராமங்களும் ,  பள்ளிப்பட்டு மற்றும் பொன்னேரி வட்டத்தில் தலா 6 கிராமங்களும் பாதிக்கப்படுகிறது. இதனால்  இந்த 6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல், உண்ணாவிரதம் , விவசாய நிலத்தில் இறங்கி போராட்டம் , கருப்புகொடி ஏந்தி போராட்டம்  என பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.  இந்நிலையில் நேற்று விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் , 6 வழிச்சாலையால் பாதிக்கப்படும் ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை நில விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது கூட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை நில விவசாயிகள்  சார்பில் 6 வழிச்சாலைக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பது , விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டிப்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  காவிரி டெல்டாவுக்கு இணையாக ஒரு பகுதி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில்  உள்ளது.  இங்கு தச்சூர் முதல் சித்தூர் வரை உயர்மட்ட அதிவிரைவு சாலை அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது . இந்த சாலை காட்டுப்பள்ளி துறைமுகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படுகிறது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு காட்டுபள்ளிக்கு சென்று ஆறு வழிச்சாலையை ஏற்க மாட்டேன் என்றார். முதல்வர் ஆனதும் ஸ்டாலின் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், ஆனால் திருவள்ளூர் கலெக்டர் விவசாயிகளை அழைத்து அச்சுறுத்தி வருகிறார். இது கண்டிக்க தக்க செயல் ஆகும். இந்த ஆறு வழிச்சாலை குறித்து தமிழக  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலுவிடம் மனு கொடுத்தோம் அதற்கு அவர் தச்சூர் முதல் சித்தூர் வரை ஆறு சாலை மாற்று வழியில் கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய அரசுக்கு , தமிழக அரசு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2021 - 2022 ம் ஆண்டு பயிர்  காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைவில் காப்பீடு வழங்க வேண்டும்.  ஒரு மூட்டை உரம் ரூ. 220 இருந்தது தற்போது 1050 ஆக உயர்த்தியுள்ளது. அதை ஸ்பிக் நிறுவனத்திடம் ,  தமிழக முதல்வர் ,  பிரமதரிடம் கூறி  விலை உயர்வை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார். அப்போது அவருடன் ஊத்துக்கோட்டை நஞ்சை நில விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆஞ்சிநேயலு,  சசிகுமார்,  ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: