பூந்தமல்லி அருகே பரபரப்பு: ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில், வீடு அதிரடியாக இடிப்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில், வீடுகளை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், கண்ணபாளையம் கிராமம் புல எண் 310ன்படி 32.99.0 ஹெக்டர்ஸ் பரப்பளவில் ஏரி உள்ளது. இதில் உள்ள 45 சென்ட் நிலத்தினை முரளி என்பவரின் மனைவி ஜெயலட்சுமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலத்தில் ஸ்ரீநாகாத்தமன் கோயில் கட்டியிருந்தார். இதனருகே வீடு ஒன்றையும் கட்டி வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் ஏரி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு கிஷோர்குமார் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த  நீதிமன்றம், ‘’ ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில், வீடுகளை இடிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, பூந்தமல்லி வட்டாட்சியர் இரா.செல்வம் தலைமையில், ஆவடி காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆர்.சதீஷ்குமார் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுப்பணித்துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு ஜேசிபி இயந்திரத்துடன் வந்து ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கோயில், வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். இதையடுத்து ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள ஏரி நிலத்தை மீட்டனர்.

Related Stories: