திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 7ம்தேதி அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழாவையொட்டி நாடகம், கலைநிகழ்ச்சி, பட்டிமன்ற சொற்பொழிவு நடந்தது. ஆரணி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணியளவில் அங்குள்ள ஒரு வீட்டின் அருகே பைக்கை நிறுத்திய ஒரு வாலிபர் , அந்த வீட்டிற்குள் குதிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர் போளூர் அருகே உள்ள பொன்நகர் பொத்தரை பகுதியை சேர்ந்த வெங்கடேசபெருமாள் (27). இவரும், அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்துள்ளனர். பின்னர் மலேசியாவில் வேலை கிடைத்ததால் சென்றுவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசபெருமாள், உடனடியாக ஊர் திரும்பினார்.

பின்னர் காதலிக்கு போன் செய்து, ‘உன்னை நேரில் சந்திக்க வேண்டும்’ என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பேரில், கடந்த 7ம்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சுவர் ஏறி குதித்தபோது, திருடன் என நினைத்து போலீசார் பிடித்துள்ளனர் என தெரிய வந்தது. இதையடுத்து வெங்கடேசபெருமாளின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Related Stories: