2 லட்ச ரூபாய் கடன் வாங்கியதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பழ வியாபாரியை கடத்தி சித்ரவதை: சகோதரர்கள் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பழ வியாபாரியை கடத்திச்சென்று அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கியதற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல்(39). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த சகோதரர்கள் முருகன்(34), மணிகண்டன்(31) ஆகியோரும் மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 8 மாதத்துக்கு முன் சக்திவேல், பழ வியாபாரம் சம்பந்தமாக முருகனிடம் 2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு அந்த பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று முருகன், மணிகண்டன் ஆகியோர் சென்று சக்திவேலிடம் 2 லட்சத்தை தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு சக்திவேல், ‘’இப்போது பணம் தர முடியாது’ என்று கூறியதாக தெரிகிறது. இதன்காரணமாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சகோதரர்கள், சக்திவேலை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை ஒரு காரில் கடத்தி சென்று அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள அவரது வீட்டில் அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளனர். எப்படியோ அங்கிருந்து சக்திவேல் தப்பிவந்துவிட்டார்.

இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், முருகன், மணிகண்டன் ஆகியோரை கோயம்பேடு மார்க்கெட்டில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’சக்திவேல் கடந்த 8 மாதத்துக்கு முன்பு வாங்கிய 2 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக சக்திவேலை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, ஆபாசமாக பேசுதல், தாக்கி காயம் ஏற்படுத்துதல், கடத்தி சென்றது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு காரை பறிமுதல் செய்தனர். பின்னர் சகோதரர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரியை கடத்தி சித்ரவதை செய்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: