கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை உடைத்து 281 பவுன், 30 கிலோ வெள்ளி கொள்ளை; விவசாய நிலத்தில் வைத்து பங்கு பிரித்தனர்

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் நகைக்கடையை உடைத்து 281 பவுன் நகைகள், 30 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கள்ளக்குறிச்சி, சேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (40). இவர் கள்ளக்குறிச்சியில் பிரபலமான நகைக்கடை வைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி அருகே புக்கரவாரி புதூர் கிராமத்தில் புதிதாக நகைக்கடை திறந்துள்ளார். இங்கு 5 பேர் வேலை செய்கின்றனர். ரூபேஷ் (25) என்பவர் கடையை கவனித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணியளவில் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை நகைக்கடை பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்த நிலையில் கிடந்தது.

உரிமையாளர் லோகநாதன் மற்றும் ஊழியர்கள் சென்று பார்த்தபோது,  281 பவுன் தங்க நகைகள், 30 கிலோ வெள்ளி பொருட்கள், நகை விற்ற பணம் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. கொள்ளையர்கள் வங்கியின் வெளியே இருந்த சிசிடிவி கேமரா வயர்களை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். நகை பெட்டியை தூக்கி சென்று, கடையின் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் பங்கு பிரித்துள்ளனர். வரஞ்சரம் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது, நகைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. கொள்ளையர்கள் அங்கு வைத்து அட்டை பெட்டியில் இருந்து நகைகள் எடுத்தபோது, அவை சிதறியிருக்கலாம் அல்லதுதகராறு ஏற்பட்டு, தாக்கிக்கொண்ட போது, சிதறி விழுந்திருக்கலாம் என  போலீசார் தெரிவித்தனர். அங்கு 10 மூக்குத்தி, 5 மோதிரம் கண்டெடுக்கப்பட்டது.

Related Stories: