ஊட்டி- கூடலூர் சாலையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஊட்டி- கூடலூர் சாலையில் நடுவட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், குந்தா, ஊட்டி போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 24 நேரமும் சாரல் மழை தொடர்வதால் கடும் குளிர் நிலவுகிறது. காற்று வீசி வருவதால், மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் நடுவட்டம் ஆகாச பாலம் அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இச்சாலையில் எச்பிஎப் அருகே சாலையின் குறுக்கே மரம் ஒன்று விழுந்தது. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், இவ்வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. தலைகுந்தா, கல்லட்டி, கிளன்மார்கன், குளிச்சோலை, மகாராஜா சாலை, அப்பர்பவானி, அவலாஞ்சி, கிண்ணக்கொரை போன்ற பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

எனினும், பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க துவங்கியுள்ளதால், விவசாய நிலங்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால், அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி ேதாட்டங்களுக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மின் உற்பத்திக்கு பயன்படும் அணைகள் உள்ள அப்பர்பவானி மற்றும் அவலாஞ்சி போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை மற்றும் காற்று வீசி வருவதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. கூடலூர், பந்தலூர், ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

மலை ரயில் நிறுத்தம்

நீலகிரியில் கனமழை காரணமாக இன்று காலை ஊட்டி- குன்னூர் இடையில் லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் குன்னூர்- ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ரயில் பாதையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories: