காற்றுடன் தொடர் மழையால் பூண்டு விலை குறைய வாய்ப்பு- விவசாயிகள் கவலை

ஊட்டி :  நீலகிரியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல ஏக்கர் பூண்டு பயிர்கள் பாதித்து, தரம் குறைந்து விலை வீழ்ச்சி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், அவரை போன்ற காய்கறிகள் அதிகளவு பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக பூண்டும் பல ஹெக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு வருகிறது. பொதுவாக, நீலகிரி பூண்டு மிகவும் காரத்துடனும், பற்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இருப்பதாலேயே விலை அதிகம்.

நீலகிரி மாவட்டத்தில் கர்நாடக மாநிலம், புனே மற்றும் சீனாவில் இருந்து வரும் பூண்டு விற்பனை செய்யப்பட்டாலும், நீலகிரி பூண்டுக்கே அதிகளவு மக்களிடம் கிராக்கி உள்ளது. அதேபோல, வெளி மாநில விவசாயிகள் நீலகிரி பூண்டை விதைகளுக்காகவும், மருந்துகளுக்காகவும் வாங்கி செல்கின்றனர். இதனால், ஆண்டு முழுவதும் நீலகிரி பூண்டிற்கு கிராக்கி இருந்து கொண்டே இருக்கும் இதனால், பெரும்பாலான விவசாயிகள் பூண்டு விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, குன்னூர் மற்றும் ஊட்டி சுற்றுவட்டாரத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் அதிகளவு பூண்டு பயிரிடப்படுகிறது.

ஊட்டி தாலூகாவில் கொல்லிமலை, கேத்தி பாலாடா, முத்தோரை பாலாடா, கப்பத்தொரை, நஞ்சநாடு, முட்டிநாடு, அணிக்கொரை, எப்பநாடு, தேனாடுகம்பை, கடநாடு உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், குன்னூர் தாலூகாவிற்கு உட்பட்ட உபதலை உட்பட பல்வேறு கிராமங்களிலும் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா, இத்தலார், நஞ்சநாடு, எமரால்டு போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. இதனால், காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு செடிகள் தற்போது தரையில் சாயத் துவங்கியுள்ளன.

பூண்டு செடிகள் தரையில் விழாமல் இருக்க விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், ஒரு சில பகுதிகளில் காற்றின் வேகம் தாங்காமல் பூண்டு செடிகள் தரையில் விழ துவங்கியுள்ளன. பூண்டு தரையில் விழுந்தால், தரம் குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: