வேலை வாங்கி தருவதாக கூறி ₹43 லட்சம் மோசடி-கணவன், மனைவி கைது

கடலூர் : அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தில்லைவிடங்கன் பகுதியை சேர்ந்தவர் ஜெய பார்த்தசாரதி பரந்தாமன் மகன் ஜெயமாதவ சாரதி(34). இவருக்கு விருத்தாசலம் அருகே உள்ள பெருவரப்பூர் கிராமத்தை சேர்ந்த சுதாகர்(44) மற்றும் அவரது மனைவி விண்ணரசி(42) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.

இதில் விண்ணரசி, தான் அரியலூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணிபுரிவதாகவும், தனக்கு ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பல பேரை நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது ஒன்றிய அரசில் அசிஸ்டன்ட் டைரக்டர் பணி காலியாக இருப்பதாகவும், அதை வாங்கி தர ரூ. 11 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய ஜெயமாதவ சாரதி, பல்வேறு தவணைகளில் விண்ணரசிக்கு ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பணி வாங்கி தரவில்லை.

இதனால் ஜெயமாதவ சாரதி, விண்ணரசியிடம் சென்று தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது ரூ.1 லட்சத்தை மட்டும் விண்ணரசி திருப்பிக் கொடுத்துள்ளார். மேலும் ரூ.10 லட்சத்துக்கு காசோலை வழங்கியுள்ளார். இதே போல சிதம்பரம் அருகே உள்ள கொடிப்பள்ளம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவரிடம் ரூ. 7 லட்சமும், நற்கரவந்தன்குடியை சேர்ந்த கண்ணபிரான் என்பவரிடம் ரூ.3 லட்சமும், கீழ மூங்கிலடியை சேர்ந்த சிவகுருநாதன் என்பவரிடம் ரூ.3,47,000, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த லட்சுமணன் என்பவரிடம் ரூ. 20 லட்சத்து 80 ஆயிரம் வாங்கிக்கொண்டு அரசு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார்.

பணம் கொடுத்தவர்கள் சுதாகர் மற்றும் விண்ணரசியிடம் சென்று கேட்டபோது அவர்கள் பணத்தை திரும்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து ஜெயமாதவ சாரதி, கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

அதன் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலா, லிடியா செல்வி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரையும் விண்ணரசியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விண்ணரசிக்கு ஏற்கனவே ராணுவத்தில் பணிபுரிந்த சகாயராஜ் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. பின்னர் ஓய்வு பெற்ற நிலையில் சகாயராஜ் இறந்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு மிலிட்டரி கேண்டினில் விண்ணரசிக்கு மேனேஜர் வேலை கிடைத்துள்ளது. ஆனால் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இரண்டாவதாக சுதாகரை திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து இருவரும் பல பேரிடம் பலவித பொய்களை கூறி பணம் மோசடி செய்து ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். மேலும் வடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மாறி மாறி குடி பெயர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் இன்னும் வேறு யாரிடமாவது பணம் மோசடி செய்துள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: