பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் நேற்று முதல் கனரக வாகனம் செல்ல தடை அமலுக்கு வந்தது-மாணவர்கள், பொதுமக்கள் நிம்மதி

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல நேற்று முதல் தடை அமலுக்கு வந்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலின்றி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலகத்துக்கு செல்வோர் என பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் கடந்த 2 மாத காலமாக கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கால்வாய் கட்டும் பணியினை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமான ஆந்திராவிலிருந்து குடியாத்தம் வழியாக பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையை அடையும் கனரக வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து, மாற்று வழியினை அறிவித்தார்.

அதன்மூலம், ஆந்திராவிலிருந்து பள்ளிகொண்டா வழியாக வரும் கனரக சரக்கு வாகனங்கள் குடியாத்தத்திலிருந்து ஆம்பூர் வழியாக திருப்பி விடப்பட்டன.

மேலும், கிருஷ்ணகிரியிலிருந்து வரும் வாகனங்களை வேலூர் காட்பாடி வழியாக ஆந்திரா மாநிலம் செல்ல உத்தரவிடப்பட்டது. இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் காலை முதலே போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்ட பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் வாகன ஓட்டிகள், மாணவ மாணவிகள், அலுவலகத்திற்கு செல்வோர் என ஏராளமானோர் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: