அங்க அடிச்சிகிறாங்க… இங்க சேர்ந்துகிறாங்க… ரஷ்ய இளைஞரை இமாச்சலில் மணந்த உக்ரைன் இளம்பெண்: இந்திய முறைப்படி திருமணம்

சிம்லா: ரஷ்யா, உக்ரைன் இடையே கடும் போர் நடந்து வரும் நிலையில், இருநாடுகளையும் சேர்ந்த இளைஞரும், இளம்பெண்ணும் இமாச்சலில் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். ‘காதலுக்கு கண் இல்லை’, ‘காதல் கண்மூடித்தனமானது; குருட்டுத்தனமானது’, என்றெல்லாம் கூறுவதுண்டு. அது உண்மை தானோ என்னவோ? அதனை நிருபிக்கும் வகையில், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 5 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய இளைஞரும், உக்ரைன் இளம்பெண்ணும் காதலித்து இமாச்சலில் திருமணம் செய்துள்ளனர். இஸ்ரேலில் வசித்து வரும் ரஷ்ய வம்சாவளியை சேர்ந்த செர்ஜி நோவிகோவுக்கும், இதே நாட்டில் வசித்து வரும்  உக்ரைன் இளம்பெண் எலோனா பிரமகாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது. ஒருவர் மீது ஒருவர் பாசத்தை கொட்டி காதலை வளர்த்தனர். தங்கள் திருமணத்தை இமாச்சல பிரதேசத்தில் இந்திய முறைப்படி நடத்த விரும்பினர்.

இதையடுத்து, இருவரும் இமாச்சலில் உள்ள தர்மசாலா நகரைத் தேர்ந்தெடுத்து வந்தனர். அங்குள்ள தரம்கோட் பகுதியில் வசிக்கும் வினோத் சர்மா என்பவரின் வீட்டில் கடந்த ஒரு வருடமாக தங்கினர். இந்நிலையில், இவர்களின் திருமணம் தர்மசாலாவில் பாரம்பரிய இந்திய முறைப்படி உள்ளூர் மக்கள் புடைசூழ நேற்று முன்தினம் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது. இந்திய மணப்பெண் உடையில் இருந்த எலோனாவை வினோத் சர்மா கன்னியாதானம் செய்து கொடுக்க, திவ்ய ஆசிரமத்தை சேர்ந்த பண்டிட் ராமன் சர்மா, சமஸ்கிருதத்தில் வேத மந்திரங்களை உச்சரிக்க, சனாதான தர்ம சாஸ்திர அடிப்படையில் நோவிகோவ் தாலி கட்ட, திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

அதன் பிறகு கிராமிய பாடல்களை இசை குழுவினர் வாசிக்க அதற்கேற்ப அங்கு திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெளிநாட்டு தம்பதிகள் இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்ததாக அங்குள்ள மக்கள் கூறினர். ஒருபுறம் ரஷ்யாவும் உக்ரைனும் சண்டையிட்டு கொண்டிருக்க, அந்நாடுகளை சேர்ந்த இருவரும் இமாச்சலில் திருமணம் செய்து கொண்டிருப்பது காதல் கரை மட்டுமல்ல; தேசம் கடந்தது என்பதை உணர்த்துகிறது.

Related Stories: