ஒன்றிய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் கோஷம்.! முடங்கியது நாடாளுமன்றம்; அமலாக்கத் துறையை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமலாக்கத் துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷமிட்டதால், நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முதல் நாளில் இருந்தே விலைவாசி உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு குறி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், விவாதத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ளாததால், சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்து விட்டார்.

இதனால், முதல் 8 நாட்கள் இரு அவைகளும் முற்றிலும் முடங்கின. பின்னர், விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த ஒன்றிய அரசு சம்மதித்தது. அப்போது, எதிர்க்கட்சிகளின் சார்பில் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. இதற்கு, கடந்த 2 நாட்களாக இரு அவைகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும், சோனியாவின் வீட்டிற்கு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டதை கண்டித்தும், ஜிஎஸ்டி வரி மற்றும் விலைவாசி உயர்வு கண்டித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

இதனால், 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் மைய பகுதிக்கு வந்த எதிர்க்கட்சிகள், ‘அரசியலமைப்பை காப்பாற்று, ஜனநாயகத்தை காப்பாற்று, சாமானிய மக்களை பாதிக்கும் ஜிஎஸ்டி’ என்று கையில் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். இதனால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு அவை மீண்டும் கூடியது, எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் கோஷமிட்டதால், முதலில் 12.30 மணிக்கும், பின்னர் பிற்பகல் 2 மணிக்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்தால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மக்களவையில் 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தொடர் அமளியால் மசோதா மீது விவாதம் நடக்கவில்லை.

Related Stories: