தொடர் கனமழையால் சித்ராவதி ஆற்று தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பாலத்தை கடக்க முயன்ற ஆட்டோ தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது-ஆந்திராவில் சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

திருமலை :  ஆந்திராவில் தொடர் கனமழையல் சித்ராவதி ஆற்று தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதில் பாலத்தை கடக்கும் ஒரு ஆட்டோ தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரி, குளங்கள்,  நிரம்பி வழிகிறது.

இதனால் பல இடங்களில் ஆறுத் தரைப்பாலங்கள்  அடித்து செல்லப்பட்டும், சில நீரில் மூழ்கியுள்ளன.  மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தண்ணீர் செல்வதை கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் பாலத்தை கடந்து சென்று சாகசம் செய்து வருகின்றனர். ஆற்றில் வெள்ளத்தின் ஓட்டம் குறைவாக இருப்பதாக தவறாக கருதி விபத்துகளில் சிக்குகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் சித்ராவதி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டது. இதனால் ஆந்திர மாநிலம், சத்ய சாய் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருவதால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்,  சுப்பாராவ் பேட்டையில் இருந்து கொடிகொண்டா நோக்கி செல்லும் வழியில் ஆற்றின் மீதுள்ள பாலத்தில்  தண்ணீர் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருக்கிறது. இதனை கண்டுகொள்ளாமல், ஆட்டோ டிரைவர் சங்கரப்பா என்பவர் பாலத்தின் மீது செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, வேகமாக பாய்ந்து செல்லும் தண்ணீரில் ஆட்டோ இழுத்து செல்லப்பட்டது. இதை பார்த்த கரையோரம் இருந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டிரைவர் சங்கரப்பாவை தேடி வருகின்றனர்.

Related Stories: