ஆம்பூரில் கொட்டி தீர்த்த கனமழை வீடுகளுக்குள் கழிவுநீருடன் புகுந்த வெள்ளம்: மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்தது

ஆம்பூர்:  ஆம்பூரில் நேற்று காலை முதல் வெயில் அதிகமாக இருந்தது. திடீரென மாலையில் சில்லென்று காற்று வீசியதை தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர், பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஆம்பூரில் ரெட்டிதோப்பு, பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளீல் கழிவுநீர் கால்வாய் நீர் மழைநீருடன் பெருக்கெடுத்து ஓடியது.இதில் ரெட்டிதோப்பு செல்லும் சாலையில் உள்ள ரயில்வே குகைவழி பாதை வழியாக கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. ஆம்பூர் அடுத்த கரும்பூர் கால்நடை மருந்தகம் அருகே மாநில நெடுஞ்சாலையில் நேற்று மாலை காற்றுடன் பெய்த கனமழையால் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்தது. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து சீரமைப்பு பணிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதேபோல் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டில் சிவன்படைதெரு, வளையல்கார தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த தெருக்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி மழை வெள்ளம் வரும் நேரத்தில் கழிவுநீர் மழைநீருடன் சேர்வதால் சாலைகள் வெள்ளக்காடாக, சேறும் சகதியுடன் காட்சியளித்து வருகிறது.

இதனால் இந்த சாலையில் மழை நீர் தேங்காத வண்ணம் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தற்போது துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை பெய்த கனமழையால் ஆம்பூரில் வளையல் காரதெரு, சிவன்படை தெரு ஆகிய இடங்களில் வெள்ளத்தால் கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தன.

இதனால் அப்பகுதியினர் வீட்டில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். எனவே, உடனடியாக மழைநீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்கவும், தொடர்ந்து இப்பகுதியில் ஏற்பட்டு வரும் இந்த பாதிப்பை உரிய கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி மாற்று வழியில் கொண்டு செல்லவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் ஆம்பூர் ஜவஹர்லால் நேரு நகர் மெயின் தெரு ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் சிறிய அளவில் உள்ளதால் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலைகள் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியினர் சாலைகளில் நடக்க கூட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் உரியவகையில் போர்க்கால அடிப்படையில் வரும் பருவமழைக்கு முன்னதாக உரிய கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: