44வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா: பட்டு வேட்டி, சட்டையுடன் அசத்தலாக வந்த முதல்வர்

தொடக்க விழாவை முன்னிட்டு, நேரு உள்விளையாட்டரங்கம் மின்னொளியில் ஜொலித்தது. இந்நிலையில், மாலை 4.32 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். வழக்கத்துக்கு மாறாக அவர் தமிழர்களின் பண்பாட்டை போற்றும் வகையில் பட்டு வேட்டி, சட்டை அங்கவஸ்திரத்தில் வந்திருந்தார். அவரது அணிந்திருந்த உடை தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் இருந்தது.

* நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

நேரு உள்விளையாட்டாரங்கில் நடத்தப்பட்ட பிரமாண்ட தொடக்க விழாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா, நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.

* கண்ணை மூடி பியானோ வாசித்த லிடியன்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரின் பியானோ இசை அனைவரையும் ரசிக்க வைத்தது. மிஸ்டர் பீன், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் தீம் மியூசிக் இசைத்து ரசிக்க வைத்தார் லிடியன் நாதஸ்வரம். கண்களைக் கட்டிக்கொண்டு ஹாரிபார்டர் தீம் மியூசிக் இசைத்தார் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் இசைத்தார். சர்வம் படேல் மணல் ஓவியம் வரைவதற்கு ஏற்ப அவர் பியானோ இசைத்ததை பார்த்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்ந்தனர்.

* பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடைபெற்ற பாரம்பரிய நடனங்களை கை தட்டி  ரசித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ‘நாமெல்லாம் ஒன்று’ என்ற மையக்கருத்தை வைத்து  இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 8 பாரம்பரிய நடனங்களை நாட்டியக்கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்களான  கதக், குச்சிப்புடி, கதக்களி, மோகினியாட்டம், பரதநாட்டியம் என ஆகியவற்றை  நடன கலைஞர்கள் ஆடினர். இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.  

* பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

* இலவச பேருந்து வசதி

மாமல்லபுரத்தில் நடைபெறும் போட்டிகளை காண, பங்கேற்க செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பில் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று என 5 இலவச பேருந்துகளை இயக்குகிறது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த பேருந்துகளில் நினைத்த இடத்தில் ஏறலாம், இறங்கலாம்.

* மருத்துவர்கள் தயார்

போட்டி நடைபெறும் இடத்தில் 198 டாக்டர்கள் உட்பட 433 பேரைக் கொண்ட 8 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கூடவே 30 அவசர ஊர்திகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* பிற்பகல் 3 மணிக்கு போட்டிகள் தொடங்கும்

செஸ் போட்டிகள் இன்று முதல் 10ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகள் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடத்த 52 ஆயிரம் சதுர அடி, 22 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் விளையாட 700 மின்னணு சதுரங்க பலகைகள் ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்டன.

Related Stories: