சென்னை, டிச.18: மயிலாப்பூர் துவாரகா காலனியை சேர்ந்தவர் மதுசூதனன்(70). இவர் ஆந்திரா வங்கியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு ெபற்றவர். தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளை அவசர தேவைக்காக அடகு வைத்தார். இதற்கிடையே மகள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் மதுசூதனன் இருந்துள்ளார். மேலும் மகள் திருணத்திற்கு பணம் இல்லாததால் கடந்த 10 நாட்களாக கடுமையான மனஉளைச்சலில் மதுசூதனன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற மதுசூதனன் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, மதுசூதனன் உடல் முழுவதும் தீ பிடித்த நிலையில் துடித்தார். உடனே தீயை அணைத்து மதுசூதனனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 65 சதவீதம் தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
