மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எம்பி.க்கள் 50 மணி நேர போராட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் இரவு தங்கினர்

புதுடெல்லி: மாநிலங்களவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 20 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே தங்கியிருந்து 50 மணி நேர போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் திமுகவின் 6 எம்பிக்கள் உட்பட 19 எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்களும், காங்கிரசின் 4 மக்களவை எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொலை’ என்ற வாசகம் எழுதப்பட்ட கருப்பு நிற முகக் கவசத்தை அணிந்து கொண்டு மாநிலங்களவைக்கு வந்தார். காலையில் மாநிலங்களவை கூடியதும், எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதனால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அவை விதிமுறை மீறி மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், இந்த வாரம் முழுவதும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் மாநிலங்களவையில் சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள் எண்ணிக்கை 20 ஆனது. தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, மாநிலங்களவையில் சஸ்பெண்ட் ஆன 20 எம்பிக்களும் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்ற வளாகத்திலேயே தங்கி 50 மணி நேர தொடர் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதே போல, மக்களவையிலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

* மன்னிப்பு கேட்டால் ரத்து

எம்பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று வலியுறுத்தினர். இதற்கு, எம்பிக்கள் தங்கள் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்தால், சஸ்பெண்ட் உத்தரவு திரும்பப் பெறப்படும் என வெங்கையா நாயுடு கூறி உள்ளார். இதே போல, இனி அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட மாட்டோம், பதாகை ஏந்தி அமளி செய்ய மாட்டோம் என எதிர்க்கட்சியினர் மன்னிப்பு கோரினால் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறி உள்ளார். இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. இதற்கிடையே, விலைவாசி உயர்வு தொடர்பான அடுத்த வாரம் விவாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: