மாணவி ஸ்ரீமதி மரணத்தால் ஏற்பட்ட கலவரத்தில் உருக்குலைந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது..!!

கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதி மரணத்தால் ஏற்பட்ட கலவரத்தில் உருக்குலைந்த கனியாமூர்  சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதோடு, பேருந்துகள் உட்பட வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த கலவரத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடர்வது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன. பள்ளியை சீரமைக்கும் வரை மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாகவும், பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகவும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்களின் ஆய்வு முழுமையாக நிறைவுபெற்ற நிலையில், வீடியோ ஆதாரங்களை கொண்டு கலவரக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

Related Stories: