வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் வழங்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி

சென்னை: வறட்சியான பகுதிகளில் வாழும் மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் சிறப்புத் திட்டத்தை ஒன்றிய அரசு வகுத்துள்ளதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஒன்றிய ஜல் சக்தி துறை இணையமைச்சர் பிரகஹலாத் சிங் பட்டேல் அளித்த பதில்: கிராமப் புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க வகை செய்யும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து ஒன்றிய அரசு அமல்படுத்தியது.

2024ம் ஆண்டுக்குள் நாடுமுழுவதும் உள்ள கிராமப்புற வீடுகளுக்கு இத்திட்டத்தை கொண்டுசெல்லும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்காக 3.6 லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டது. இதில் 2.08 லட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசும்; மீதத் தொகையை மாநில அரசுகளும் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, நாட்டில் 3.23 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் வசதி இருந்தது. கடந்த 35 மாதங்களில் இந்த எண்ணிக்கை 6.61 கோடியாக உயர்ந்துள்ளது.  அந்த வகையில் நாட்டில் மொத்தமுள்ள 19.13 கோடி கிராமப்புற வீடுகளில் இதுவரை 9.84 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், 30 சதவிகித பணிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள்  மற்றும் பாலைவனப் பகுதிகளில் மேற்கொள்ள விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. நிதி ஒதுக்குவது மற்றும் பணி முன்னுரிமை ஆகியவற்றில் இப்பகுதி கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதுதவிர, வறட்சி பாதித்த பகுதிகள் மற்றும் மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளுக்கு பெரும் அளவில் நீரைக் கொண்டு செல்லும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. அப்படி குடிநீர் கொண்டுசெல்ல முடியாத பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, ஏற்கனவே உள்ள நீர்நிலைகளைப் புனரமைப்பது, மற்றும் மேம்படுத்துவது போன்ற பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலையளிப்பு உறுதித்திட்டத்தின் மீழ் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு தனித்தனி குழாய்கள் மூலம் நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குழாயில் சுத்தமான குடிநீரும்; மற்றொரு குழாயில் கழிப்பறைகளில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட நீரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு 2019-20 ம் நிதியாண்டில் 373 கோடி ரூபாயும்; 2020-22 ல் 921 கோடி ரூபாயும்; 2021-22 ம் ஆண்டில் 3691 கோடி ரூபாயும் ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் பிரகஹலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

Related Stories: